Article

அரசு வேலைக்காக கோவையில் துப்புரவுப் பணியாளர்கள் ஆன எம்பிஏ, எம்எஸ்சி படித்த பட்டதாரி இளைஞர்கள்..!

நாடு முழுவதும் பெருகி விட்ட கல்வி நிறுவனங்கள் நமது நாட்டின் வளர்ச்சியாக கருதப்பட்டாலும், அதில் படித்தவர்கள் அனைவருக்கும் அவர்களது படிப்பிற்கேற்ற வேலை கிடைக்கிறதா என்றால் நிச்சயம் இல்லை

பொறியியல் படித்த பல பட்டதாரிகள் விஐபி’க்களாக, அதாங்க வேலையில்லா பட்டதாரிகளாக அவதிப்பட்டு வருகின்றனர். இதனாலே எம்.பி.ஏ. படித்தவர்கள் கூட பல இடங்களில் செக்யூரிட்டி உட்பட எந்த வேலையாக இருந்தாலும், வேலை என ஒன்று கிடைத்தால் போதும் என பணிக்குச் சேர்ந்து விடுகின்றனர்.

இது ஒருபுறம் என்றால், ‘கால் காசு என்றாலும் கவர்ன்மெண்ட் காசு’ என அரசு உத்தியோகம் என்பது நீண்ட காலமாக மக்கள் மத்தியில் இருக்கும் மிகப்பெரிய கனவு என்று தான் சொல்ல வேண்டும். காரணம் அரசு வேலைகளில் தனியார் நிறுவனங்களை விட பணிச்சுமை குறைவு, வேலை நேரம் குறைவு, சலுகைகள் மற்றும் பணி நிரந்தரம் போன்ற காரணங்களைக் கூறலாம்.

இதனால் தான் எப்படியாவது அரசுப் பணியில் சேர்ந்து விட வேண்டும் என்ற ஆசை, பள்ளி பயிலும் முக்கால்வாசி மாணவர்கள் மனதில் பெற்றோர்களால் விதைக்கப்பட்டு விடுகிறது. இதற்காகவே பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு அவர்கள் தங்களைத் தயார் செய்து கொள்கின்றனர். ஆனால் கல்வியறிவில் முன்னேறிய தமிழகம் போன்ற மாநிலங்களில் எல்லோருக்கும் அரசுப்பணி சாத்தியமாகி விடுவதில்லை.  

இதனாலேயே துப்புரவுப் பணியாளர் முதற்கொண்டு அலுவலக உதவியாளர் பணிக்குக்கூட பட்டம் பெற்ற மாணவர்கள் கூட, கல்வித்தகுதி குறைந்தவர்களுடன் போட்டிக்கு வந்து விடுகின்றனர். இதற்கு ஒரு மிகப்பெரிய உதாரணமாகி இருக்கிறது சமீபத்தில் நடந்த கோவை மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் தேர்வு.

கோவை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளன. இங்கு 2,520 நிரந்தர துப்புரவுத் தொழிலாளர்கள், 2,308 ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். காலியாக உள்ள 549 துப்புரவு பணியாளர் பணியிடங்களை நிரப்ப மாநகராட்சி சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

படித்த பட்டதாரிகள் உள்பட 7,300 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர். இதில் 5,200 பேரே பங்கேற்றனர். இட ஒதுக்கீடு அடிப்படையில் அவர்களது விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு 321 பேருக்கு துப்புரவுத் தொழிலாளர் பணிநியமன உத்தரவு வழங்கப் பட்டது.

வழக்கத்திற்கு மாறாக இம்முறை அங்கு நிறைய இளம் பட்டதாரிகள் துப்புரவுப் பணியாளர்களாகத் தேர்வாகி உள்ளனர். அவர்களில் பலர் ஏற்கனவே தாங்கள் பார்த்துக் கொண்டிருந்த கை நிறைய சம்பளம், ஒயிட்காலர் ஜாப் என பல்வேறு வேலைகளைத் தூக்கிப் போட்டு விட்டு வந்தவர்கள் என்பது தான் ஆச்சர்யம் தருகிறது.

அவர்களில் கோவை குனியமுத்தூரைச் சேர்ந்த சங்கீதாவும் ஒருவர். 23 வயதான அவர் மைக்ரோ பயாலஜி பட்டதாரி. இவர் கோவை மாநகராட்சியில் துப்புரவுப் பணியாளர் பணிக்குச் சேர்ந்துள்ளார்.

அரசு வேலையில் சேர வேண்டும் என்பது எனது சிறுவயது கனவு. தற்போது அது நிறைவேறி உள்ளது. அரசு வேலை என்பதால் நான் இந்தப் பணியில் சேர்ந்தேன். எனக்கு முதன் முதலாக ராஜவீதியில் ரோட்டை சுத்தம் செய்யும் பணி வழங்கப்பட்டது. இந்த பணி ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்தது. சாலையில் செல்பவர்கள் அனைவரும் என்னையே பார்த்து சென்றனர். ஆனால் நான் அதனை சமாளித்து விட்டேன். இந்த வேலை எனக்கு மிகவும் பிடித்து உள்ளது. இந்தப் பணியில் இருந்து இன்னும் மேலே உள்ள பணிகளுக்கு வர முயற்சி எடுப்பேன்,” என்கிறார் சங்கீதா.

அதோடு பள்ளியில் படிக்கும்போதே நாட்டு நலப்பணி திட்டத்தில் இருந்ததால், அப்போதே குப்பைகள் எடுக்கும் பணியை செய்துள்ளாதாக கூறும் சங்கீதா, ‘தற்போது அதுவே எனக்கு வேலையாக கிடைத்துள்ளது என்றும், எனவே இந்த வேலையில் தன்னால் சிறப்பாக பணியாற்ற முடியும்’ என நம்பிக்கையுடன் கூறுகிறார்.

இதேபோல் தனியார் நிறுவனம் ஒன்றில் கணக்காளராக வேலை பார்த்த பத்மாவதி (35), தற்போது அந்த வேலையை விட்டு விட்டு மாநகராட்சியில் துப்புரவுப் பணியாளராக சேர்ந்துள்ளார்.

அரசு வேலை என்பதால் நான் மாநகராட்சி துப்புரவு பணியில் சேர்ந்தேன். தொடக்கத்திலேயே மாதம் ரூ. 17,500 சம்பளம் கிடைக்கிறது. மேலும் பென்சன், ஆண்டுதோறும் சம்பள உயர்வு கிடைக்கிறது. வேலை நேரமும் குறைவு. இதனால் விரைவாக வீட்டுக்குச் சென்று என் குழந்தைகளை பார்த்து கொள்ள முடிகிறது,” என்கிறார் பத்மாவதி.

டிப்ளமோ சிவில் என்ஜினீயரிங் பட்டதாரி நவீன்குமார் (23), தனியார் நிறுவனத்தில் செய்த வேலையை ராஜினாமா செய்து விட்டு, மாநகராட்சி துப்புரவு பணியில் சேர்ந்துள்ளார்.

முதன்முதலில் கோவை மாநகராட்சியில் படித்த பட்டதாரிகள் துப்புரவு பணிக்கு சேர்ந்துள்ளனர் என்பதே மோனிகா என்ற 23 வயது மாணவி மூலம் தான் ஊடகங்களில் தலைப்புச் செய்தியானது. காரணம் எம்.எஸ்சி படித்துக் கொண்டிருக்கும் மோனிகா, துப்புரவு பணிக்கு விண்ணப்பித்து நேர்காணலிலும் கலந்து கொண்டார். அவருக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வேலைக்கான ஆணையை வழங்கினார். அதன் மூலம் தான் இந்தச் செய்தி ஊடகங்களில் வெளியாகி பலரை ஆச்சர்யமும், அதிர்ச்சியும் கலந்த உணர்வில் தள்ளியது.

நான் எம்.எஸ்சி. படித்து கொண்டு இருக்கிறேன். மாநகராட்சியில் வேலைக்கு ஆள் எடுப்பதாக அறிவிப்பு வந்தது. இதையடுத்து விண்ணப்பித்து நேர்காணலில் பங்கேற்றேன். படித்திருக்கிறோம் என்பதால் துப்புரவுப் பணி செய்யமாட்டோம் என்பது இல்லை. எந்த வேலையாக இருந்தாலும் செய்வோம். வேலை கிடைத்தது என்று போனில் தகவல் வந்ததும் இன்ப அதிர்ச்சியாக இருந்தது,” என்கிறார் மோனிகா.

முதலில் ஒரு பட்டதாரி மாணவிதான் துப்புரவு பணியாளர் வேலைக்குச் சேர்ந்திருக்கிறார் என்பதே பலருக்கும் வியப்பைத் தந்த நிலையில், தற்போது அங்கு நிறைய பட்டதாரிகள் ஏற்கனவே பார்த்துக் கொண்டிருந்த தங்களது வேலையை ராஜினாமா செய்து விட்டு இந்த வேலைக்குச் சேர்ந்திருப்பது ஆச்சரியத்தை அளித்துள்ளது.