NEWS

அமெரிக்காவில் நபர் ஒருவருக்கு உதவிய இந்தியரின் சோக முடிவு..!

அமெரிக்காவில் வறுமையில் வாடிய நபருக்கு உதவிய இந்தியர், அந்நபரின் தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரிவருகையில்,

அமெரிக்காவின் தென்கிழக்கில் உள்ள ஜியார்ஜியா மாநில டிகால்ப் கவுன்டி பகுதியின் தென்கிழக்கில் உள்ள நகரம் லிதோனியா (Lithonia). அப்பகுதியில் உள்ள செவ்ரான் ஃபுட் மார்ட் எனும் உணவகத்தில் பகுதி-நேர வேலை பார்த்து வந்தவர், இந்தியரான விவேக் சைனி (25).

50 முறை சுத்தியலால் தாக்குதல்

அந்த உணவகத்தில் சில தினங்களுக்கு முன் ஜூலியன் ஃபால்க்னர் (Julian Faulkner) எனும் வீடற்ற ஒருவர் உணவும் குடிநீரும் கேட்டு வந்தார்.

அவர் மேல் இரக்கப்பட்ட விவேக்கும் உணவக பணியாளர்களும் அவருக்கு உணவு, சிப்ஸ், மற்றும் கோக் வழங்கினர். குளிருக்கு போர்வை கேட்ட ஜூலியனுக்கு அவர்கள் தங்களிடம் இருந்த உடைகளை வழங்கினர்.

அதன் பின்னர் அடிக்கடி அங்கு வருவதும் போவதுமாக இருந்த ஜூலியனுக்கு விவேக் தன்னால் இயன்ற உதவிகளை தினமும் செய்து வந்தார். உணவக வாசலை வசிப்பிடம் போல் ஜூலியன் பயன்படுத்தி உறங்க தொடங்கியதும் அவரை விவேக் வேறு எங்காவது சென்று விடுமாறு கூறினார்.

எனினும் அவர் வெளியேற மறுத்ததால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

கடை வாசலில் இருந்து வெளியேறா விட்டால் காவல்துறையினரை அழைக்க வேண்டி வரும் என விவேக் ஜூலியனிடம் எச்சரித்தார்.

சிறிது நேரத்தில் விவேக் வீட்டிற்கு புறப்பட தயாராகி வெளியே வந்தபோது எதிர்பாராத விதமாக அவரை மறித்த ஜூலியன், கையில் மறைத்து வைத்திருந்த ஒரு சுத்தியலால் விவேக்கின் முகத்தில் சரமாரியாக தாக்கினார்.

விவேக் முகத்தில் ஜூலியன் சுமார் 50 முறை சுத்தியலால் தாக்கினார். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த விவேக், சிறிது நேரத்தில் அங்கேயே உயிரிழந்தார்.

சம்பவத்தை கண்ட பிற பணியாளர்கள் அதிர்ச்சியடைந்து பொலிஸாருக்கு தகவல் அளித்ததன் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் அங்கு நின்று கொண்டிருந்த ஜூலியனை கைது செய்து அவரிடம் சுத்தியலை தவிர இருந்த மேலும் 2 கத்திகளையும் பறிமுதல் செய்தனர்.

ஜூலியனை சிறையில் அடைத்த காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பரிதாபப்பட்டு உதவிய இந்தியர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.